மஜாஜ் செய்ய அழைத்து வியாபாரியிடம் 20 சவரன், ரூ.40,000 பறித்த பெண் கைது
சென்னை, ஓட்டேரி வள்ளுவன் சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ், 50; மர வியாபாரி. அவர் வழக்கமாக மசாஜ் செய்ய செல்லும் இடத்தில், ஆண்ட்ரியா என்ற பெண் பழக்கமானார். அவர், மே 29 காலை சார்லசை மொபைல் போனில்தொடர்பு கொண்டார்.அப்போது, 'சூளைமேட்டில் உள்ள ரேகா என்பவரது வீட்டிற்கு சென்று மசாஜ் செய்து கொள்ளுங்கள்; உங்கள் மொபைல் போன் எண்ணை அவரிடம் கொடுத்துள்ளேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.பின், அன்று மதியம் ரேகா வீட்டிற்கு சார்லஸ் சென்றார். அங்கு ரேகாவும், இரு ஆண்களும் சேர்ந்து, அவர் கழுத்தில் அணிந்து இருந்த, 20 சவரன் செயின், கை கடிகாரத்தை பறித்தனர். மேலும், பண பரிவர்த்தனை செயலியான 'ஜி பே' வாயிலாக, 40,000 ரூபாயையும் பெற்று, சார்லசை தாக்கியுள்ளனர்.அங்கேயே மயங்கிய சார்லஸ் பின் எழுந்து பார்த்தபோது, யாருமே அங்கு இல்லை. சம்பவம் குறித்து, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் பதுங்கியிருந்த, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரேகா, 60, அவரது பேரன் நவீன்குமார், 23 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2.85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். போலீசார் கூறுகையில், 'ஆண்ட்ரியா, அவரது கணவர், ரேகா, அவரது பேரன் நவீன்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, திட்டமிட்டு சார்லசிடம் நகை, பணம் பறித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஆண்ட்ரியா மற்றும் அவரது கணவரை தேடி வருகிறோம்' என்றார்.