2 மாதங்களாக தெரு விளக்குகள் எரியாததால் பெண்கள் அச்சம்
பெருங்குடி, மழைநீர் வடிகால்வாய் பணியால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரு மாதங்களாக தெரு விளக்குகள் எரியாததால், கந்தன்சாவடி பகுதி பெண்கள் அச்சமடைகின்றனர். பெருங்குடி மண்டலம், கந்தன்சாவடி சந்தோஷ் நகர் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 500க்கும் மேற்பட்ட வீடுகள், 10க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு, இரு மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால்வாய் திட்டப்பணி துவங்கியது. இதற்காக, பள்ளம் தோண்டும்போது, மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால், சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: கந்தன்சாவடி பகுதியில், தொழிற்சாலைகள், வீடுகள், தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் உள்ளன. மழைநீர் வடிகால்வாய் திட்டப்பணியால் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டன; சில மின் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் சில தெருக்களில் விளக்குகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்து காணப்படுவதால், பணி முடிந்து, இரவு நேரத்தில் வீடு திரும்பும் பெண்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. மேடு பள்ளம் தெரியாமல், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, மின் வாரிய அதிகாரிகள், மின் விளக்குகளை ஒளிர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.