மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி விவகாரம் * ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது
தரமணி, தரமணி தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவியர் இருவரை, வெளியே அழைத்து சென்றவர்களின் ஒருவர் ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. போக்சோ வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.சென்னை, தரமணி, தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்கனிக் கல்லுாரியில், வெளி மாவட்டத்தை சேர்ந்த, 17 வயதுள்ள இரண்டு மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த இருவரும், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான, ஆண் நண்பர்களை காதலித்தாக கூறப்படுகிறது. இருதினங்களுக்குமுன் விடுதியில் இருந்து வெளியேறினர். ஒரு மாணவி அன்றிரவும், மற்றொரு மாணவி மறுநாளும் விடுதிக்கு திரும்பினர். விடுதி நிர்வாகம் விசாரித்தபோது, காதலர்களுடன் வெளியே சென்றது தெரிந்தது. இதனால், பெற்றோரை வரவழைத்த விடுதி நிர்வாகம், மாணவியரை, அவர்களுடன் அனுப்பி வைத்தது. கல்லுாரி நிர்வாகம் இருவருக்கும், டி.சி., வழங்கி உள்ளது. இதற்கிடையில், மாணவியருக்கு பாலியல் தொல்லை என செய்தி பரவியது. மாணவியரை கல்லுாரியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றுமுன்தினம், எஸ்.எப்.ஐ., மாணவர் அமைப்பினர், கல்லுாரிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டனர். தரமணி போலீசார், மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், மாணவியரை வெளியே அழைத்து சென்ற காதலர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். ஒருவர் ஆட்டோ ஓட்டுனர் என தெரிந்தது. அவரை நேற்று, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவியுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து விசாரிக்கின்றனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.***