பெரும்பாக்கத்தில் கலையரங்கம் ரூ.1.40 கோடியில் பணி துவக்கம்
சென்னை: பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில், 1.40 கோடி ரூபாயில் கலையரங்கம் கட்டும் பணி, நேற்று துவங்கியது. பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 30,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த, மண்டபம் வசதி இல்லாததால், சாலையோரங்களில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கலையரங்கம் கட்ட, 1.40 கோடி ரூபாய் வாரியம் ஒதுக்கியது. மொத்தமுள்ள, 17,700 சதுர அடி பரப்பில், 4,800 சதுர அடியில், 200 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இதற்கான பணியை, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று துவக்கி வைத்தார். நான்கு மாதத்தில் பணி முடியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.