வீடு இடிக்கும் பணியின்போது சீலிங் விழுந்து தொழிலாளி பலி
அயனாவரம்:வீடு இடிக்கும் பணியின்போது, சீலிங் விழுந்து தொழிலாளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பெரிய குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; கட்டடத் தொழிலாளி. இவர், சக ஊழியர்களுடன் கடந்த 10 நாட்களாக, அயனாவரம், வி.பி., காலினியில் உள்ள வெங்கட லக்ஷ்மி என்பவரின் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன், நண்பர் பிரபு என்பவருடன், முதல் தளத்தின் கூரையை சுத்தியால் இடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, சீலிங் பெயர்ந்து மணிகண்டனின் மேல் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையறிந்த அயனாவரம் போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.