உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளி கொலை: இருவருக்கு ஆயுள்

தொழிலாளி கொலை: இருவருக்கு ஆயுள்

சென்னை, டிச. 18--அயனாவரம் அருகே, சக தொழிலாளியை, இரும்பு குழாயால் அடித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அயனாவரம் ஐ.சி.எப்., அருகே, 2016ல் மருத்துவமனை கட்டுமானப் பணி நடந்து வந்தது. அங்கு, நாகப்பட்டினத்தை சேர்ந்த வீரய்யா, 42, காவலாளியாக வேலை செய்து வந்தார். அருகே நடந்த கட்டுமானப் பணியில், ஆந்திராவை சேர்ந்த ரமேஷ், 44, சுமன், 32 ஆகியோர் வேலை செய்து வந்தனர். அவர்கள் வீரய்யா குடியிருந்த வீட்டின் அருகே தங்கியிருந்தனர். இந்நிலையில், 2016 ஜூன் 7ல் ரமேஷ், தன் மகளின் பிறந்த நாளை, மது அருந்தி கொண்டாடினார். அப்போது, வீரய்யாவை மது அருந்த அழைத்துள்ளார். அவர் மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ரமேஷின் நண்பரான சுமன், வீரய்யாவை பிடித்து கொள்ள, அவரது தலையில் இரும்பு குழாயால், ரமேஷ் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வீரய்யா உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக, சென்னை ஐ.சி.எப்., போலீசார் வழக்குப்பதிந்து, ரமேஷ், சுமன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மாவட்ட, 20வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.அங்காள ஈஸ்வரி முன் நடந்தது.போலீசார் தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல்வழக்கறிஞர் டி.ஆர்.கே.முத்துராமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ரமேஷ், சுமன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை