அறக்கட்டளை பெயரில் ரூ.6 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது
செங்குன்றம், அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்வர், 40. இவரை, ஆவடியைச் சேர்ந்த அபர்ணா, 27, என்பவர், கடந்த 2023, செப்., மாதம், மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது, திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், அங்குள்ள அனாதை குழந்தைகள், முதியோருக்கு உதவுமாறும் கூறியுள்ளார்.இதை நம்பிய தினேஷ்வர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, 2.61 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.ஒருகட்டத்தில், அபர்ணாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தினேஷ்வர், அறக்கட்டளைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு குறைவான எண்ணிக்கையிலேயே முதியோரும், குழந்தைகளும் இருந்துள்ளனர்.அதுமட்டுமின்றி, அவர்களுக்கு முறையான வசதிகளும் செய்து தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் விசாரித்ததில், அறக்கட்டளை பெயரில் பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் வசூலித்ததும் தெரிய வந்தது.இது குறித்து, தினேஷ்வர் செங்குன்றம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து அபர்ணாவை அழைத்து விசாரித்தனர்.அதில், அறக்கட்டளையின் பெயரில், பலரிடமிருந்து 6 கோடி ரூபாய் வரை பெற்று, மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.பின், அபர்ணாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.