ஆன்லைன் டிரேடிங் ஆசைகாட்டி ரூ.88 லட்சம் மோசடி: வாலிபர் கைது
முத்தியால்பேட்டை, சென்னை, சின்மயா நகர், முனியப்பா நகரைச் சேர்ந்தவர் ரோகித் கிம், 37; தனியார் வங்கி சீனியர் மேலாளர்.கடந்த 2023ல், இவரது நண்பரான ராஜசேகர், தனக்கு தெரிந்த தினகரன் என்பவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவருடைய நிறுவனத்தில், 'ஆன்லைன் டிரேடிங்'கில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, ரோகித் கிம்மை வற்புறுத்தியுள்ளார்.இதையடுத்து, ரோகித் கிம் பல்வேறு தவணைகளில், 88 லட்ச ரூபாயை ராஜசேகர் மற்றும் அவரது தோழி பவித்ரா ஆகியோரது, வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் ராஜசேகர் ஏமாற்றினார்.இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், ராஜசேகர் கூறிய தினகரன் என்ற நபர் பொய் என்பதும், நிதி நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்பதும் தெரிய வந்தது. மேலும், ராஜசேகர், அவரது தாய் இந்திரா மற்றும் ராஜசேகரின் தோழி பவித்ரா ஆகியோர், கூட்டாக சேர்ந்து, ரோகித் கிம்மை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, மண்ணடி, புது தெருவைச் சேர்ந்த ராஜசேகர், 28, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த பைக், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.