பிச்சைக்காரரை வெட்டி கொன்ற வாலிபர் கைது
மாதவரம்:பிச்சைக்காரரை வெட்டி கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மாதவரம் தபால் பெட்டி அருகே 'டாஸ்மாக்' கடை மற்றும் மதுபானக்கூடம் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த மார்ட்டின், 25 மற்றும் பாக்யராஜ், 26, ஆகியோர், மது அருந்தி வெளியே வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், முன்பகை காரணமாக இருவரையும் வெட்டியுள்ளார். சுதாரித்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆத்திரமடைந்த நபர், அவர்கள் சிக்காததால், அவ்வழியாக பிச்சை கேட்டு வந்த முதியவரை, சரமாரியாக வெட்டினார். அங்கிருந்தவர்கள், முதியவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் அதிகாலை முதியவர் உயிரிழந்தார். இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், இறந்தது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 61, என தெரிந்தது. போலீசாரின் விசாரணையில், முதியவரை வெட்டியது கொடுங்கையூரைச் சேர்ந்த ஜெரோம், 21 என்பது தெரிய வந்தது. மாதவரம் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.