ஐஸ்கிரீம் கேக்கிற்கு கூடுதலாக ரூ.700 வசூல் இழப்பீடு வழங்க சொமேட்டோவிற்கு உத்தரவு
சென்னை:'ஐஸ்கிரீம் கேக்'கிற்கான எம்.ஆர்.பி., எனும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட, கூடுதலாக 700 ரூபாய் வசூலித்த 'சொமேட்டோ' நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, 7,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் தாக்கல் செய்த மனு:அண்ணா நகரில், 'ஹவ்மோர் ஐஸ்கிரீம்' என்ற தனியார் நிறுவன கிளை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்., 20ல், 'இத்தாலிய கசாட்டா ஐஸ்கிரீம் கேக்'கை 'சொமேட்டோ' வாயிலாக, ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். ஐஸ்கிரீம் கேக் விலையாக, 1,182.36 ரூபாய் வசூலித்தனர். சொமேட்டோ 'ஆன்லைன்' செயலில், கேக்கின் எம்.ஆர்.பி., எனும் அதிகபட்ச சில்லரை விலை 300 ரூபாய்.உடனே, சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு, எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலை வசூலித்தது குறித்து புகார் அளித்தேன். ஐஸ்கிரீம் கேக் விற்ற நிறுவனத்திடமும் உண்மையான விலை குறித்து கேட்டேன். எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலைக்கு, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு விற்கவில்லை என, தகவல் தெரிவித்தனர்.பலமுறை புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே, எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலை விற்று, சேவை குறைபாடுடன் நடந்த நிறுவனங்கள் மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் கவிதா கண்ணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஸ்கிரீம் நிறுவனம் தரப்பில், 'உணவு பொருளை விநியோகம் செய்தது மொமேட்டோ நிறுவனம் தான். பொருளுக்கு கூடுதல் விலை வசூலித்ததற்கு, நாங்கள் பொறுப்பாக முடியாது' என தெரிவிக்கப்பட்டது.சொமேட்டோ நிறுவனம் தரப்பில், 'தவறுதலாக எம்.ஆர்.பி.,யை விட கூடுதல் விலை வசூலிக்கப்பட்டு விட்டது. சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட்டது. தவறாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை திருப்பித் தரத் தயாராக இருந்தோம். ஆனால், புகார்தாரர் பெற மறுத்துவிட்டார். எனவே, இது சேவை குறைபாடு ஆகாது' என தெரிவிக்கப்பட்டது.நேர்மையற்ற வணிகம்இரு தரப்பு வாதங்களை கேட்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:உணவு பொருளுக்கான எம்.ஆர்.பி.,யை விட கூடுதலாக 700 ரூபாய் வசூலித்தது என்பது நியாயமற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாடு.பொருளை விற்ற, அதை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்த ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி தர தயாராக இருந்தும், அதை புகார்தாரர் மறுத்தவிட்டார் என்றும், தவறுதலாக கூடுதல் விலை வசூலிக்கப்பட்டது என, கூறும் வாதங்களை ஏற்க முடியாது.எனவே, பொருளை விற்ற, விநியோகம் செய்த நிறுவனங்கள், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 5,000 ரூபாய் இழப்பீடும், 2,000 ரூபாய் வழக்கு செலவு சேர்த்து, மொத்தம் 7,000 ரூபாய் வழங்க வேண்டும். இரண்டு மாதத்துக்குள் இத்தொகையை வழங்கவில்லை எனில், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.