உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் பொருளுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் கணுவக்கரை மக்கள்

ரேஷன் பொருளுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் கணுவக்கரை மக்கள்

அன்னூர் : 'கணுவக்கரையில் ரேஷன் பொருள் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது' என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கணுவக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் கணுவக்கரை, ஆலபாளையம், முத்துக்குட்டிபாளையம் ஆகிய மூன்று ஊர்களை சேர்ந்த 826 குடும்பங்கள் ரேஷன் பொருள் பெற்று வருகின்றன. இந்த ரேஷன் கடையை சரியாக திறப்பதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கணுவக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கூறுகையில்,'ரேஷனில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எப்போது ரேஷன் கடையை திறந்து, பொருள் தருவார்கள் என்று தெரிவதில்லை. இதனால், தினசரி கூலியை இழந்து பல முறை ரேஷன் கடைக்கு வந்து காத்திருக்க வேண்டியுள்ளது. மாத கடைசியானால் பொருள் தீர்ந்து விடுகிறது. மேலதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை,'' என்றனர்.தொடக்க வேளாண் கடன் சங்க செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், ''ரேஷன் கடையில் 2010 மார்ச் முதல் பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. வங்கிப் பணியையும், ரேஷன் பொருள் வினியோகத்தையும் ஒருவரே பார்க்க வேண்டி உள்ளது. ரேஷன் கடைக்கு புதிதாக பணியாளர் விரைவில் நியமிக்கப்படுவார். அப்போது, பிரச்னையில்லாமல் ரேஷன் பொருள் சப்ளை செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ