கோவை : தமிழக மேற்கு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிதீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக, நக்சல் ஊடுருவல் ஒடுக்கப்பட்டுள்ளது. 'மாஜி' நக்சல்கள் மற்றும் நக்சல் ஆதரவாளர்கள் 45 பேரை போலீசார் ரகசிய கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்.தமிழக மேற்கு மண்டலத்திலுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முன்பு நக்சல் பாதித்த மாவட்டங்களாக இருந்தன. நக்சல் இயக்கத்தினர், ஆதரவாளர்கள் அங்குள்ள மாந்தோப்புகளில் துப்பாக்கி பயிற்சியிலும் ஈடுபட்டனர். கடந்த 2000ம் ஆண்டுகளில் தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சல்கள் இருவர் கொல்லப்பட்டனர்; பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமான வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின், நக்சல் செயல்பாடு தமிழகத்தில் முடக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில், கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல்கள் ஊடுருவி மீண்டும் தங்களது இயக்கத்துக்கு ஆள் திரட்டினர். அங்குள்ள ஆதரவாளர்களுக்கு துப்பாக்கி பயிற்சி முகாம் நடத்தினர். அதிரடிப்படையினர் அங்கும் ரெய்டு நடத்தி ஒருவரை சுட்டுக்கொன்றனர்; பலர் தப்பியோடிவிட்டனர். தமிழக போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளால் நக்சல்களின் ஊடுருவல் முயற்சி அவ்வப்போது ஒடுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், நக்சல் ஆதரவு இயக்கங்களின் பிரசாரம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களிலுள்ள மலைவாழ் கிராம மக்களிடம் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் இதுபோன்ற பிரசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில், மக்களுக்கு சிலர் துண்டுபிரசுரம் வினியோகித்து ஆதரவு திரட்டியது தெரியவந்தது. சந்தேகத்துக்குரிய கிராமங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, உளவுத்தகவல் சேகரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். அதேபோன்று, கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வால்பாறை தேயிலை தோட்டங்களில் வடமாநிலத்தவர் அதிகளவில் வேலை செய்து வருவதாகவும், அவர்களில் வடமாநிலங்களில் இருந்து தப்பிவந்த நக்சல்களும் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்தும் போலீசார் நடத்திய விசாரணையில் நக்சல் அமைப்பினர் இல்லை என, தெரியவந்தது. இருப்பினும் தமிழகத்தில் நக்சல்கள் மீண்டும் தலையெடுக்காத வகையில் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி., போலீசாரும், உள்ளூர் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் கூறியதாவது: தமிழகத்தில், குறிப்பாக தமிழக மேற்கு மண்டலத்தில் நக்சல்களின் ஊடுருவல் அறவே இல்லை. மலைவாழ் கிராமங்கள் சிலவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவான பிரசாரம் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து வருகிறோம். முன்பு நக்சல் பாதித்த மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளன. அந்த மாவட்டங்களில் மீண்டும் நக்சல்கள் தலைதூக்காத வகையில், 'நக்சல் ஒழிப்பு ஸ்பெஷல் டிவிஷன்' என்ற சிறப்பு பிரிவு சிறப்பாக செயல்படுகிறது. டி.எஸ்.பி., தலைமையிலான போலீஸ் படையினர் உளவுத்தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,யும் கண்காணிக்கிறது. கடந்த காலங்களில் நக்சல் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, அதுதொடர்பான வழக்குகளில் தொடர்புடைய 45 நபர்கள் ரகசிய கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவ்வப்போது திடீர் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. போலீசாரின் அதிதீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக, தமிழக மேற்கு மண்டலத்தில் நக்சல் நடமாட்டம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, ஐ.ஜி., வன்னியபெருமாள் தெரிவித்தார்.