உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு அனுமதியில்லாமல் உள்ளூர் சேனல் மீண்டும் ஒளிபரப்பு

அரசு அனுமதியில்லாமல் உள்ளூர் சேனல் மீண்டும் ஒளிபரப்பு

தமிழகத்தில், உள்ளூர் சேனல்களை ஒளிபரப்ப, ஏல முறை அமலுக்கு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு பின், இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. அனுமதியின்றி ஒளிபரப்பாகும் சேனல்களை தடை செய்ய, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது.தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் துவங்கியவுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும், எம்.எஸ்.ஓ.,க்கள் மூலம் செயல்பட்டு வந்த உள்ளூர், 'டிவி' சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. செப்டம்பர் 2ம் தேதி முதல், 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்களை மக்கள் பார்க்கும் வகையில், அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பு சேவை துவங்கியது. ஒரு சில சேனல்களை தவிர, மற்ற கட்டண சேனல்கள் அரசு கேபிளில் ஒளிபரப்பாகி வருகிறது.விளம்பரம் மூலம் அதிக வருவாயை ஈட்டி, வரி செலுத்தாமல் அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்த பல லோக்கல் சேனல்கள், தற்போது மூடப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்குள் ஒளிபரப்பு சேவையை வழங்கினால், விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டலாம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது. தமிழக முதல்வர், உள்ளூர் சேனல் ஒளிபரப்பு தொடர்பாக எந்தவித அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் உள்ள உள்ளூர் சேனல் உரிமையாளர்களும், அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், 'சேனல் ஒளிபரப்புக்கு அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்ததுடன், சேனல்கள் தரப்பில் இருந்து, அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.சில நாட்களாக பல மாவட்டங்களில், 'லோகோ' இல்லாமல், உள்ளூர் சேனல்கள், 'வாட்டர் லோகோ'வுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. சினிமா பாடல்களை மட்டும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். மற்ற நிகழ்ச்சிகளுக்கு விரைவில் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். உள்ளூர் சேனல் ஒளிபரப்பு தொடர்பாக தலைவர் ராதாகிருஷ்ணனுக்கும், நிர்வாக இயக்குனர் ஜெயராமனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.'உள்ளூர் சேனல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்; அரசு சட்ட விதிகளின் படியே அவற்றுக்கு அனுமதியளிக்கப்படும்' என, தலைவரிடம், ஜெயராமன் கூறியதாக தெரிகிறது. நேற்று, இரு தரப்பும், இது குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். உள்ளூர் சேனல்களை ஏல முறையில் விடவும், உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அவற்றை நடைமுறைப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் உள்ளூர் சேனல்களை நிறுத்துமாறு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் உள்ளூர் சேனல் இயங்குவது தடை செய்யப்பட வில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது.தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், எம்.எஸ்.ஓ.,க்கள் மூலம் உள்ளூர் சேனல் ஒளிபரப்பானது. தற்போது, உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு ஒளிபரப்புவது சட்டப்படி தவறு. உள்ளூர் சேனல் ஒளிபரப்பை நிறுத்துவது குறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏல முறை கூட அமலுக்கு வரலாம். தேர்தலுக்கு பின் எந்த மாதிரியான நடவடிக்கை என்பது தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.உள்ளூர், 'டிவி' பிரச்னை தொடர்பாக, அரசு கேபிள், 'டிவி' சேர்மன் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மொபைல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது; அவர் எடுக்கவில்லை.ஏல முறை வந்தால் மீண்டும், 'கொள்ளை' தான்! அரசு கேபிள், 'டிவி'யின் தற்போதைய தலைவர், தி.மு.க., ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இவர் தான், ஏல முறையில், ஒளிபரப்பு அனுமதி கொடுக்கலாம் எனக் கூறி வருகிறார். ஏல முறையை அமல்படுத்தினால், ஏற்கனவே, 'கொள்ளை' அடித்த சேனல்கள், பினாமி பெயரில், ஏலம் எடுத்து, அரசு கேபிள், 'டிவி'யை ஆட்டிப் படைக்கும் சூழ்நிலை உருவாகும்.பாலிமர் கட்டுப்பாட்டில் உள்ள 7 உள்ளூர் சேனல் ஒளிபரப்புசேலத்தில், பாலிமர், சி.டி.என்., என்ற இரண்டு, எம்.எஸ்.ஓ.,க்கள் உள்ளனர். பாலிமர் கட்டுப்பாட்டில், எஸ்.எஸ்., 'டிவி', கைலாஷ் 'டிவி', ராஜம் 'டிவி', பாலிமர் 'டிவி', கிங் 'டிவி' உள்ளன. சி.டி.என்., தனியாகவே செயல்படுகிறது. நான்கு நாட்களாக, இந்த உள்ளூர் சேனல்கள் பாடல்களை ஒளிபரப்பி சேவையை துவக்கி உள்ளது. சேலம் அரசு கேபிள், 'டிவி' அலுவலகத்தில் உள்ள ரங்கநாதன் என்பவர் மூலமே, உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அரசு அனுமதியின்றி சேனல் துவங்கப்பட்டது குறித்த தகவல், நிர்வாக இயக்குனர் கவனத்துக்கு சென்றது. இதனால், கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் தலைவருக்கும், நிர்வாக இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் சேனல் ஒளிபரப்பை நிறுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் மகரபூஷணத்திடம் கேட்டபோது,''கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் தலைவரிடம் பேசினேன். 'பொறுங்கள், தகவல் சொல்கிறேன்' என, கூறினார். அதனால், நாங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்