-நமது நிருபர்-சென்னை மாநகராட்சியுடன் 50 கிராம ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது போல, கோவையுடன் வளர்ந்துள்ள உள்ளாட்சிகளையும் விரைவில் இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.இருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்த கோவை, இப்போது இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. வேகமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே, கடந்த 2011ல், மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகள், ஒரு கிராம ஊராட்சி ஆகியவை, கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன.அதற்கு முன்பு வரை, 152 சதுர கி.மீ., பரப்பிலிருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் வார்டு எண்ணிக்கையும் 72லிருந்து 100 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த 2011லேயே கோவையுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ள பல்வேறு உள்ளாட்சிகளும் திட்டமிட்டு, கோவையுடன் இணைக்கப்படவில்லை. முட்டுக்கட்டை
அப்போதிருந்த ஆளும்கட்சியினர் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், கோவையுடன் இணைவதை எதிர்த்தனர். கோவை நகருடன் சேர்ந்து வளர்ந்துள்ள இருகூர், வெள்ளலுார், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளையும் இணைக்காதது, அவற்றின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையானது.ஏற்கனவே, ஸ்மார்ட் சிட்டி, அம்ருத், துாய்மை பாரதம் போன்ற திட்டங்கள், இந்தப் பகுதிகளைத் தவிர்த்து விட்டு, நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தால், முழுமையடையாமல் அரைகுறையாகவுள்ளன. தற்போது புதுப்பிக்கப்படும் கோவை மாஸ்டர் பிளானில், இந்தப் பகுதிகள் உட்பட இன்னும் விரிவான பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.அதே நேரத்தில், இந்த உள்ளாட்சிகளும், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி, சின்னியம்பாளையம், நீலம்பூர், கீரநத்தம் ஊராட்சிப் பகுதிகளும், மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள மக்களுக்கு அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் கிடைக்காத நிலை உள்ளது; ஒருமித்த வளர்ச்சி தடைபடுகிறது. வரையறை குழப்பம்
சரியான விரிவாக்கம் நடக்காததால், வார்டு வரையறையிலும் பெரும் குளறுபடி நடந்துள்ளது. உதாரணமாக, ஐந்தாவது வார்டில் 6,719 வாக்காளர்களே உள்ளனர்; 81வது வார்டு வாக்காளர்கள் எண்ணிக்கை, 32 ஆயிரத்து 450. இந்த குளறுபடியை நீக்குவதற்கு, வார்டு மறுவரையறை செய்ய, கடந்த 2022ல் தமிழக அரசு முயற்சி எடுத்தது.அதாவது, மாநகராட்சியிலுள்ள 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை சரிநிகராகப் பிரித்து, 150 வார்டுகளை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் தான், பெருநகரங்களுக்கு மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதால், கோவைக்கான நிதி குறைகிறது.இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியுடன் மேலும் 50 கிராம ஊராட்சிகளை இணைத்து, 200 வார்டுகளை 250 ஆக உயர்த்தவும், தாம்பரம், ஆவடி மாநகராட்சி களையும் விரிவாக்கம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க., அரசு இந்த விஷயத்திலும் கோவையை புறக்கணிக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!
ஒருங்கிணைந்த திட்டம்
கோவையின் குப்பைக் கிடங்கு அமைந்துள்ள 600 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்குச் சொந்தமானது. ஆனால் அந்த பகுதி, வெள்ளலுார் பேரூராட்சிக்குள் உள்ளது. இந்த குப்பைக் கிடங்கால் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அதை மாநகராட்சியுடன் இணைத்தால், நிரந்தரத் தீர்வுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்க முடியும்.