கெட்டுப்போன 103.5 கிலோ மீன்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
கோவை:உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கெட்டுப்போன நிலையில், இருந்த, 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை சார்பில், உணவுப்பொருட்கள் குறித்த ஆய்வுகள், அவ்வப்போது நடத்தப்படுகின்றன. கோவை உக்கடம் மற்றும் செல்வபுரம் பை-பாஸ் ரோட்டில், மொத்தம் மற்றும் சில்லறை மீன் விற்பனைக்கடைகள் அமைந்துள்ளன.ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மீன் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நேற்று, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகள் என, 12 பேர் அடங்கிய ஆறு குழுவினர், இவ்விரு பகுதிகளிலும் உள்ள மீன்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். உக்கடம் லாரிபேட்டை பகுதியில் உள்ள, 35, செல்வபுரம் பை-பாஸ் ரோட்டில் உள்ள 16 என, மொத்தம், 51 மொத்த மீன் மார்க்கெட், கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கெட்டுப்போன மீன்கள், பழைய மீன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், 5 கடைகளில், 65 கிலோ, நான்கு சில்லறை விற்பனை கடைகளில், 38.5 கிலோ என, 103.5 கிலோ கெட்டுப்போன மீன்கள், பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.இதன் மதிப்பு, ரூ.50 ஆயிரம். கெட்டுப்போன மீன்களை வைத்திருந்த ஒன்பது கடைகளுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோன்ற குறைகள் கண்டறிந்தால், 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
கண்டுபிடிப்பது எப்படி?
உணவுப்பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:n நல்ல மீனின், கண்கள் நல்ல பளபளப்புத் தன்மையுடன் மின்ன வேண்டும். கண்கள் உள்ளே போய், சிவந்தோ அல்லது பழுப்பு நிறத்திலோ இருக்கக்கூடாது.n கண்ணின் கருவிழி நேராக இருந்தால் அது நல்ல மீன். மாறாக, கருவிழி மிகவும் கீழே சென்று, கண் உள்ளே போயிருந்தால் அது கெட்டுபோன மீன்.n நல்ல மீனின் செதில், செங்கல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கெட்டுப்போன மீனின் செதில், அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.n நல்ல மீனின் தோலை விரலால் அழுத்தும் போது, தோல் உள்ளே அழுந்தி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். கெட்டுப்போன மீன் அவ்வாறு பழைய நிலைக்கு திரும்பாது, குழியாகவே இருக்கும்.n மீனில் இருந்து அழுகிய நாற்றம் வந்தால், அது கெட்டுப்போன மீனாக இருக்கும்.இவ்வாறு, தமிழ்செல்வன் கூறினார்.