திரண்டு வந்து கொட்டிய தேனீ கூட்டம் மக்கள், மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
உடுமலை : மடத்துக்குளம், கணியூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், திடீரென தேனீக்கள் திரண்டு வந்து கொட்டியதில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மடத்துக்குளம், கணியூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று மாலை பொதுமக்கள், பள்ளி மாணவியர் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது, அருகிலிருந்த முட்புதர்கள் மத்தியில், 5 அடி உயரத்திற்கு காணப்பட்ட தேன் கூட்டை மர்மநபர்கள் கலைத்து விட்டனர்.அதனால், நுாற்றுக்கணக்கான தேனீக்களை கொண்ட கூட்டம் பறந்து வந்து, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோட்டில் காத்திருந்த பொதுமக்களையும், பள்ளி முடித்து வந்த, மாணவ, மாணவியர்களை கொட்டியது.திடீர் தேனீக்களின் தாக்குதலால் நிலை குலைந்த, மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருப்பினும், அவை விடாமல் துரத்தி, துரத்தி கொட்டியது.மேலும், பைக்கில் வந்தவர்களையும் விடாமல், துரத்தி கொட்டியது. இதில், காயமடைந்த மாணவர்கள், பொதுமக்கள் என, 20க்கும் மேற்பட்டோர், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இச்சம்பவத்தால், கணியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.