உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண்காணிப்பு குழுவா... இல்லை, கவனிப்பு குழுவா? கட்டாய வசூலில் ஈடுபடும் போலீசாரால் அதிருப்தி

கண்காணிப்பு குழுவா... இல்லை, கவனிப்பு குழுவா? கட்டாய வசூலில் ஈடுபடும் போலீசாரால் அதிருப்தி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், கண்காணிப்புக்காக நியமிக்கப்பட்ட குழு, 'கவனிப்பு' வழங்க கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் ஓட்டு போட வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், 'ஷிப்ட்' அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.ஒவ்வொரு குழுக்களிலும், போலீசார், ஒன்றிய அதிகாரிகள், வீடியோகிராபர் இருப்பர். இவர்கள், முறையான ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒரு சிலர் இதை பயன்படுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.பொள்ளாச்சி லோக்சபாவில், வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் நின்ற பறக்கும்படையினர், அவ்வழியாக இளநீர் ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி விபரங்களை கேட்டுள்ளனர்.ஆவணங்கள் சரியாக இருந்தும், கவனிப்பு செய்து செல்லுமாறு போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த வாகன ஓட்டுநர், பணம் கொடுத்த பின்னரே வாகனத்தை எடுத்து செல்ல அனுமதித்ததாக புகார் எழுந்துள்ளது.

'கவனிப்பு' குழுவா?

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அமைத்து, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். முறையான ஆவணங்களின்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். தேர்தலில் தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்ட ஒரு சில குழுவில் உள்ள போலீசார், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.வியாபாரிகள், சமூக வலைதளங்களிலேயே போலீசாருக்கு இன்று எவ்வளவு கொடுத்தேன் என பதிவிடும் சூழலும் காணப்படுகிறது.கவனிப்பு செய்தால் வாகனங்களை விடுவதும்; இல்லையெனில், ஏதோ ஒரு காரணத்தை கூறி பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது.அதில், டீ குடிக்க வைத்து இருந்த பணத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு சென்று வாருங்கள் என கூறியதாக வியாபாரிகள் நொந்து கொண்டுள்ளனர்.அரசியல் கட்சியினர் பணம் கொண்டு செல்வதை தடுக்காமல், இதுபோன்று வேலைகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. வியாபாரிகளிடம் இதுபோன்று வசூலை நிறுத்தி விட்டு, தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் அரசியல்வாதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ