| ADDED : ஆக 20, 2024 10:22 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், ஆதார் சேவை தாமதம் ஆனதால் மக்கள் அவதிப்பட்டனர்.கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முள்ளுப்பாடி, சூலக்கல், குளத்துப்பாளையம், கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.முகாமில், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்றது. மக்கள் பங்கேற்று குறைகளை மனுவாக அளித்தனர். முகாமில், ஆதார் சேவை மதியம், 12:00 மணிக்கு மேல் துவங்கப்பட்டதால் மக்கள் பலர் ஆதார் திருத்தம் செய்ய பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும், சிலர் குழந்தைகளுக்கு ஆதார் திருத்தம் செய்ய வேண்டும் என காத்திருந்தனர்.மக்கள் கூறுகையில், 'கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மட்டுமே ஆதார் திருத்தம் செய்யப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு, 20 முதல் 25 டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது.அங்கு காத்திருக்க சிரமம் ஏற்படுவதால், மக்களுடன் முதல்வர் முகாமிற்கு வந்தோம். ஆனால் இங்கு ஆதார் சேவையை பயன்படுத்த முடியாமல் போனது. இதனால் பலர் திரும்பி சென்றனர். மற்ற துறைகள் வரும் நேரத்தில் ஆதார் சேவை மையம் செயல் பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.