கோவை:மாணவர்களுக்கு, பாடத்தை தாண்டி, கூடுதல் தனித்திறன்களை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், 83 ஆரம்ப, 38, நடுநிலை, 10 உயர்நிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, இப்பள்ளிகளில், 33 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவது, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டுவது, மேஜைகள், புத்தகங்கள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மாணவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், நேற்று பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவர்களின் வாசிக்கும் திறனை ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இந்நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தனித்திறனை வளர்க்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாடத்தை தாண்டி, கூடுதல் தனித்திறன்களை கண்டறிந்து மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறியதாவது:மாணவர்கள் பல்வேறு தனித்திறன்களுடன் உள்ளனர். அதை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பள்ளிகளில், பாடத்தை தாண்டி, கூடுதல் தனித்திறன்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில், சிலம்பம், பாட்டு, நடனம், தற்காப்பு கலை உள்ளிட்ட தனித்திறன் கலைகளை பயிற்றுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த மாணவர் எந்த தனித்திறனில், ஆர்வமாக உள்ளாரோ அதை அவருக்கு கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.