உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய செய்தி அங்கக வேளாண்மை பயிற்சி விவசாயிகள் பங்கேற்பு

விவசாய செய்தி அங்கக வேளாண்மை பயிற்சி விவசாயிகள் பங்கேற்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு வட்டாரம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு உட்பட்ட கோமங்கலத்தில் அட்மா திட்டத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் நாகநந்தினி வரவேற்றார். வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியர் யாழினி தேவி பேசுகையில், ''மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியமானதாகும். மேலும், மண்வள மேலாண்மை என்பது அதிக மகசூல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.மண் வளத்தை பாதுகாக்கவும், வளங்குன்றாமல் இருக்கவும் பயிர் சுழற்சி முறை, ஊடுபயிர்கள், பல பயிர்கள், மூடாக்கு பயிர்கள் போன்ற தொழில்நுட்பத்தை கையாள வேண்டும். உயிர் உரங்களின் பங்கும் இன்றியமையாததாகும். மேலும், கரிம, தழைச்சத்தினை பெறுவதற்கு பசுந்தாள் உரமிடுதல் அவசியமாகும்,'' என்றார். மண் பரிசோதனையின் அவசியம், மண் மாதிரி எடுக்கும் முறை, இதனால் பெறப்படும் மண் வள அட்டையின் உபயோகம் குறித்தும் விளக்கப்பட்டது. மண் பரிசோதனை செய்து உரமிடுவதன் வாயிலாக, ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப அதிகமாக உபயோகிப்பதை தடுக்கலாம். தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதன் வாயிலாக சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை அதிகரிக்கலாம் என விளக்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி, தோட்டக்கலைத்துறையில் உள்ள திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.உதவி வேளாண் அலுவலர் குமார், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், உதவி வேளாண் அலுவலர் செல்வராணி, வேளாண்மை துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ