உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த நீரில் நிறைந்த மகசூல் தரும் ராகி வேளாண் துறை அழைப்பு

குறைந்த நீரில் நிறைந்த மகசூல் தரும் ராகி வேளாண் துறை அழைப்பு

கோவை:குறைந்த நீரில் ராகி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயனடைய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கக இணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களில், ராகி முக்கியமான பயிர். மானாவாரியாக, மிகக்குறைந்த நீரைக் கொண்டு, சுமாரான மண் வளத்திலும், நிறைவான மகசூல் தர வல்லது. தை, ஆடி பட்டங்களில், அனைத்து வகையான நிலத்திலும் ராகி பயிரிடலாம்.கை விதைப்பு முறையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். ஆறு மணி நேரம் விதையை நீரில் ஊற வைத்து, அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா 3 பாக்கெட்டை, ஒரு எக்டருக்கான விதையுடன் கலந்து, விதைக்க வேண்டும்.பூஞ்சானக் கொல்லி, திரம் 4 கிராம், கார்பென்டசிம் 2 கிராம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரத்துக்குப் பின் விதைக்கலாம். கை விதைப்பு செய்திருந்தால், இடை உழவு செய்ய முடியாது. எக்டருக்கு 3.3 லட்சம் செடிகள் இருந்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும். ராகிக்கு வறட்சியைத் தாங்கும் பண்பு உண்டு.பூச்சி மேலாண்மைக்கு, தைமீத்தோயேட் 30 இ.சி., அல்லது இட்டாகுளோரேபிரையிட் 30.5 சதவீதம் எஸ்.சி., அல்லது தியேமேன்தாக்ஸ்சம் 30சதவீதம் இ.சி., போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை, ஒட்டும் திரவம் உடன் கலந்து தெளிக்க வேண்டும்.ஒரு எக்டருக்கு 12 என்ற அளவில், இனக்கவர்ச்சிப் பொறி அல்லது விளக்கப் பொறிகள் அமைக்கலாம். வரப்பு ஓர ஆமணக்கு பிப்ரோனில், மொமேட்டின் பேன்சோயேன் மருந்து தெளித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம். அறுவடை செய்த தானியங்களை, புடைத்து சுத்தம் செய்து சேமிக்க வேண்டும். மானாவாரி நிலத்தில் 7 ஆயிரம் முதல் 7,500 கிலோ வரையும், இறவை நிலத்தில் 6,000 முதல் 6,500 கிலோ வரையும் மகசூல் கிடைக்கும். உரிய தொழில் நுட்ப முறைகளைக் கடைப்பிடித்தால், ராகியில் அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !