அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டும் டிரைவர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி முறையீடு
கோவை: பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.அதன் விபரம்:* குறிச்சி ஹவுசிங் யூனிட் கஸ்துாரி கார்டனை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், 'குறிச்சி ஹவுசிங் யூனிட்டில், 591 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. ரோடு வசதி இல்லை. பாதாள சாக்கடை திட்டம் இரு ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என கூறியுள்ளனர்.* தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கொடுத்த மனுவில், 'குனியமுத்துார், 87வது வார்டு திருவள்ளுவர் நகரில், 25 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சுகாதார மையம் இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது; சுற்றுவட்டார பகுதியை சுத்தம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். காந்தி நகர் அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பிருந்தாவன் நகரில் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது; அதை இடித்து விட்டு, புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.* டி.வி.எஸ்., நகரை சேர்ந்த ஷாஜ் கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், '16வது வார்டில் உள்ள எங்கள் நகரில், ஷாஜ் கார்டனுக்கு அருகே உள்ள நிலத்தில், புதிதாக குதிரை லாயம் அமைக்கப்படுகிறது. முதியோர் இல்லம், ஆதரவற்ற சிறுமியர் இல்லம், மாநகராட்சி சிறுவர் பூங்கா ஆகியவை அருகாமையில் உள்ளன. இவர்கள் குதிரை லாயத்தால் பாதிக்கப்படுவர் என்பதால், அனுமதி அளிக்கக் கூடாது' என கூறியுள்ளனர்.*சித்தாபுதுாரில் உள்ள சிறகுகள் மகளிர் சுய உதவிக்குழுவினர் அளித்த மனுவில், 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு, சித்தாபுதுாரில் உள்ளது. 216 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியுள்ள எல்லையை, நில அளவையர் மூலமாக அளவீடு செய்து, கற்கள் நட்டுத் தர வேண்டும்' என, கோரியுள்ளனர்.*மாநகராட்சியில் அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டும் ஒப்பந்த டிரைவர்கள் கொடுத்த மனுவில், 'மாநகராட்சியில் ஒப்பந்த ஜீப் டிரைவர்களாக, 55 பேர் பணிபுரிகிறோம். தினக்கூலியாக, 759 ரூபாய் வழங்கப்படுகிறது. கலெக்டர் நிர்ணயித்த கூலியான, 808 ரூபாய் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர். டிரைவர்கள் மேலும் கூறுகையில், 'பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறோம். காலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை பணிபுரிகிறோம். பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, கூறினர்.