உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறைக்குள் சவுக்கு சங்கர் மீது தாக்குதல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை

சிறைக்குள் சவுக்கு சங்கர் மீது தாக்குதல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை

கோவை : பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில், கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது, சிறைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு கோவை சிறையில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தியது. சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர், 'சவுக்கு மீடியா' என்ற பெயரில் 'யு டியூப்' சேனல் நடத்தி வருகிறார். இவர், ரெட்பிக்ஸ் என்ற மற்றொரு 'யு டியூப்' சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக, கோவை சைபர் கிரைம் எஸ்.ஐ., சுகன்யா அளித்த புகாரை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது, நான்கு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது, கடந்த 4-ம் தேதி அவரை கைது செய்தனர். கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் நான்கு நாட்கள் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையில், சிறையில் சங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அவரது தரப்பு வக்கீல், அதே கோர்ட்டில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு மாஜிஸ்திரேட்சரவணபாபு உத்தரவிட்டார்.அதன் பேரில், இலவச சட்ட உதவி மைய பேனல் அட்வகேட் மூன்று பேர், இரண்டு அரசு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை கோவை மத்திய சிறைக்கு சென்று சவுக்கு சங்கரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை மேற்க்கொண்டனர். சிறை அதிகாரிகள் மற்றும் வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். அதன் அறிக்கையினை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

ஜாமின்மனு தாக்கல்

இந்நிலையில் சவுக்கு சங்கரை ஜாமினில் விடுவிக்க கோரி, அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை, வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருந்த விடுதியில், அவரது உதவியாளர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம், 42, கார் டிரைவர் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராம்பிரபு, 28 ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் கஞ்சா வழக்கில், தேனி போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சவுக்கு சங்கர் மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், தேனி போலீசார் அவ்வழக்கில், சவுக்கு சங்கரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ