உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னை விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதல் காணப்படுகிறது.இதனையடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில், பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணையில், விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தோட்டக்கலை அலுவலர் காவிய தீப்தினி, தென்னை சாகுபடி முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினார்.உதவி இயக்குனர் சுரேஷ்குமார் பேசியதாவது:வெள்ளை ஈ தாக்கப்பட்ட தென்னை மரங்களில், இலையின் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் வெள்ளை ஈக்கள் முட்டை இடுகின்றன.அதன் குஞ்சுகள், கிளைகளின் சாற்றினை உறிஞ்சி முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இவை, கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். கீழடுக்கில் உள்ள இலைகளின் மீது பசை போன்ற கழிவு திரவம் படர்ந்து, அதன் மேல் கரும்பூசனம் வளர்கிறது. இதனால், ஓலையில் பச்சையம் இழந்து, மகசூல் குறையும்.தென்னையில் ஊடுபயிராக உள்ள, பாக்கு, கொய்யா, மரவள்ளி, வாழை, இலுப்பை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் வெள்ளை ஈக்களின் தாக்குதலை காணலாம்.

கட்டுப்படுத்தும் முறைகள்

சுருள் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, தாக்கப்பட்ட தென்னந்தோப்புகளில், ஏக்கருக்கு 2 வீதம், விளக்குப்பொறி அமைத்து, அவற்றை கவர்ந்து அழிக்கலாம்.மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் என்பதால், மஞ்சள் நிற ஒட்டு பொறிகள், விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலிதீன் தாள்களை, ஏக்கருக்கு, 10 வீதம் ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவர்ந்தும் அழிக்கலாம்.தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட இலை அடுக்கு ஓலைகளின் மீது விசைத்தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட, நன்மை செய்யும் ஓட்டுண்ணியான என்கார்சியா என்ற கூட்டு புழு உள்ள தென்னை ஓலை துண்டுகளை ஏக்கருக்கு, 20 வீதம் ஈக்கள் தாக்கப்பட்ட இலைகளின் மீது, 10 மரம் இடைவெளியில் வைத்து ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சிகளின் முட்டைகளான, கிரைசோபிட் என்ற இரை விழுங்கிகளை, ஏக்கருக்கு, 400 முட்டைகள் வீதம் தாக்கப்பட்ட மரங்களில் விட வேண்டும்.கரும்பூசானத்தை கட்டுப்படுத்த, ஒரு கிலோ மைதா மாவினை, ஒரு லிட்டர் தண்ணீரில், கரைத்து கொதிக்க வைத்து, மைதா மாவு பசை தயார் செய்ய வேண்டும்.அதன் பின், 10 லிட்டர் நீரில், 250 கிராம் மைதா மாவு பசையோடு, 10 மில்லி ஓட்டும் திரவம் கலந்து, தாக்கப்பட்ட ஓலைகளின் மீது தெளிக்கலாம். இவ்வாறு, தொடர்ந்து செய்து வருவதன் வாயிலாக, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி தென்னை மரங்களை பாதுகாக்கலாம்.இவ்வாறு, பேசினார்.மடத்துக்குளம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன், பூவிகாதேவி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு, கையேடு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ