பாரதி நகர் முதல் வீதியில் சாக்கடையால் துர்நாற்றம்
குறுக்கே ஓடும் குதிரைகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, ஹவுசிங் போர்டு காலனியில், பத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. திடீரென குறுக்கே ஓடும் குதிரைகளால், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். சாலையில் நடந்து செல்வோருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.- பாலாஜி, கோவைப்புதுார். சாலையில்எரிக்கப்படும் குப்பை
என்.எஸ்.ஆர்.,ரோடு, வி.கே.கே.,மேனன் ரோடு, அருணா திருமண மண்டபம் அருகே, எஸ்.பி.ஐ., வங்கி எதிரே, சாலையோரத்தில் குப்பை குவிந்துள்ளது. சிலர் குப்பையை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால், துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இங்கு, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.- சிவ சுப்பிரமணியன், சாய்பாபாகாலனி. கடும் துர்நாற்றம்
கஸ்துாரிநாயக்கன்பாளையம், வனபிரஸ்தா அருகே உள்ள பாதாள சாக்கடை, சரிவர துார்வாராமல் உள்ளது. சாக்கடையில் குப்பை அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.- ஹரிகரன், பெரியநாயக்கன்பாளையம். மின்கம்பம் சேதம்
உப்பிலிபாளையம், 53வது வார்டு, காந்திபுதுார், இரண்டாவது தெரு, கம்பம் எண் ஏழு, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் துாணின் அடிப்பகுதியில், பெரிய விரிசல் காணப்படுகிறது. கம்பிகள் வெளியே தெரியும்படி, அபாயகரமாக உள்ளது. கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.- ராஜ்குமார், காந்திபுதுார். தெருவிளக்குகள் பழுது
கவுண்டம்பாளையம், 33வது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசு குடியிருப்பில், நான்கு தெருவிளக்குகள் பழுதாகியுள்ளன. கடந்த ஆறு மாதமாக தெருவிளக்குகள் பழுது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- சண்முகம், கவுண்டம்பாளையம். புதிய சாலையில் குழிகள்
சிங்காநல்லுார், காமராஜர் சாலையிலிருந்து இந்திரா கார்டன் செல்லும் வழியில், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில், மின் புதை வழி தடம் சரிசெய்ய குழிகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த பின்னரும், தார் போட்டு குழிகளை மூடவில்லை. வெறும் மண் கொண்டு மூடியுள்ளனர்.- மகேந்திரன், சிங்காநல்லுார். டெங்குநோய் அபாயம்
போத்தனுார், 95வது வார்டு, காந்திஜி ரோடு, பாரதி நகர் முதல் வீதியில், பல நாட்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. சாக்கடை கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக இருப்பதால், டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.- அருண்குமார், போத்தனுார். மண்ணில் மாட்டும் வாகனங்கள்
கோவை மாநகராட்சி, 56வது வார்டு, சூர்யா நகர், முதல் வீதியில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் குழிகளை சரியாக மூடுவதில்லை. பெயரளவிற்கு மூடும் குழிகளில், தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. இதில் வாகனங்களின் சக்கரங்கள் சிக்குகின்றன.- கார்த்திக், சூர்யா நகர். பள்ளி அருகேகுவியும் குப்பை
குனியமுத்துார், 88வது வார்டு, அரசு துவக்கப்பள்ளி அருகே, திறந்தவெளியில் சிலர் தொடர்ந்து குப்பையை வீசிச்செல்கின்றனர். இதனால், குடியிருப்பு பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. குப்பையை அகற்றுவதுடன், தொடர்ந்து கொட்டாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.- சதீஷ்குமார், குனியமுத்துார். பாதாள சாக்கடையில் அடைப்பு
போத்தனுார், மேட்டூர் 100வது வார்டு, அகிலாண்டேஸ்வரி கோவில் வீதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி சாக்கடை நீர் நிரம்பி சாலையில் வழிகிறது. குடியிருப்பு பகுதியில், கடும் துர்நாற்றம் வீசுகிறது.- சுப்பிரமணியன், போத்தனுார். விளக்கு எரிவதில்லை
பாலக்காடு ரோடு அபர்ணா மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சுந்தராபுரம் செல்லும் சாலையில் உள்ள பல மின் கம்பங்களில், விளக்குகள் எரிவதில்லை. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சப்படுகின்றனர்.- கே.செந்தில்குமார், இடையர்பாளையம். சுகாதார சீர்கேடு
தடாகம் ரோடு, இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- எஸ்.தனபாலன், டி.வி.எஸ்., நகர். நாய் தொல்லை அதிகம்
கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவு அமைந் துள்ள பகுதியில், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில், இவை இப்பகுதியில் கும்பலாக சுற்றித்திரிகின்றன. மக்கள் அச்சப்படுகின்றனர்.--ஆர்.குணசேகரன், பீளமேடு.