திருச்சி, திருநெல்வேலிக்கு பஸ் வசதி ஏற்படுத்தணும்!
வால்பாறை: வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம், திருப்பூர், மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி பஸ் வசதி உள்ளது.வால்பாறையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல, பொள்ளாச்சி சென்று, பல மணி நேரம் காத்திருந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர்.இது குறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக வால்பாறையில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.சொந்த ஊருக்கு செல்ல, வால்பாறையிலிருந்து, 64 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு சென்று, அங்கிருந்து வேறு பஸ்சில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறையிலிருந்து திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.