உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா மாறுதல் 15 நாட்களில் சாத்தியம் அட... உண்மைதானுங்க! ஒரே மாதத்தில் உட்பிரிவு சான்றிதழ்

பட்டா மாறுதல் 15 நாட்களில் சாத்தியம் அட... உண்மைதானுங்க! ஒரே மாதத்தில் உட்பிரிவு சான்றிதழ்

கோவை;வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் வழங்க, மாவட்ட நிர்வாகம் வசதி ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைப்பதில்லை; மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை ஆகியவையே, வருவாய்த்துறைக்கு எதிராக பொதுமக்கள் கூறும் முக்கிய புகார்கள். அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் பெற, 'சேவை பெறும் உரிமைச் சட்டம்' வழிவகை செய்கிறது. இந்த சட்டத்தின்படி, அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காலக்கெடுவுக்குள் ஒரு சேவை கிடைக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், அபராதத் தொகையை, தாமதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும், குறித்த காலத்துக்குள் சேவையளிக்கத் தவறும் அலுவலர்கள் தண்டிக்கப்படவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, வருவாய்த்துறை சார்பில் வழங்கும் ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக, 15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும், வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார்.இது குறித்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறியதாவது:தமிழக அரசின் நில வருவாய்த்துறை கமிஷனரின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை சார்ந்த பணிகளை வேகமாக முடித்து, மக்களுக்கு அதன் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்ற, கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வருவாய்த்துறை சார்ந்த 26 சான்றிதழ்கள், ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 15 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு, சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில், என்ன காரணங்களால் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதையும், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால், அதை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறேன். அதனால் இப்போது சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

'லஞ்சம் கேட்டால்நடவடிக்கை'

''ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்பட்டாலும், விசாரணை மேற்கொள்ள மொபைல் போனில் பேசி வரவழைத்து, லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரப்பூர்வமான புகார்கள் மீது, நிர்வாக ரீதியான விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலியான புகார்கள் கொடுப்போர் மீதும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார் டி.ஆர்.ஓ.,ஷர்மிளா.

சான்றிதழ் கிடைக்கும் நாட்கள்

பட்டா மாறுதல், பெயர் மாற்றம் - 15 நாட்கள் ரேஷன் கார்டு - 30 நாட்கள்வாரிசுச் சான்றிதழ் - 15 நாட்கள்உட்பிரிவு செய்தல்- - 30 நாட்கள்இறப்புச் சான்றிதழ் - 7 நாட்கள்வருவாய் சான்றிதழ்- - 15 நாட்கள் ஜாதிச்சான்று - 7 நாட்கள் மின் இணைப்பு- - 14 நாட்கள்குடிநீர் இணைப்பு - 7 நாட்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ashanmugam
செப் 10, 2024 18:58

நான் வீட்டு பட்டா அரசு வழிமுறைபடி எல்லா டாக்குமெண்ட், உரிய மனு லட்டர் உடன் கடந்த ஜூன் 3ம்தேதி,2024 அன்று வேலூர் காட்பாடி பஞ்சாயத் தாலுக்கா ஆபிஸில் சமர்பித்தும் மூன்று மாதம் ஆகியும் லஞ்சம் தராத காரணத்தால் என் டாகுமெண்ட்யை கிடங்கில் போட்டு விட்டனர். அங்கே போய் முறைப்படி அனுகிநாலும் மரியாதை நம்பத்தகுந்த பதில் கிடையாது. மேலும், சிஎம் செல், தலைமை முதன்மை செயலாளர் அவர்களுக்கு 50முறைக்கு மேல் இமெயில் அனுப்பியும் எந்த வித பதில் கிடையாது. ஆக இந்த திமுக ஆட்சியில் லஞ்சம் தராமல் வேலை ஆகாது என வெறுத்துப்போய், மேற்கண்ட நடவடிக்கையை விட்டு விட்டேன். கடந்த அதிமுக ஆட்சியிலும் 10000ரூ லஞ்சம் கேட்டதால் என்னால் வீட்டு பட்டா வாங்கமுடியல? இப்பவும் எப்பவும் திராவிட கட்சி ஆட்சிகள் தமிழகத்தில் உள்ளவரை என்னால் பட்டா வாங்கமுடியாது தீர்மானித்து விட்டேன் தமிழக மக்களே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை