சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் குப்பைகள் கொட்ட இடமில்லை
மேட்டுப்பாளையம்;சிக்கதாசம்பாளையம் ஊராட்சி குப்பைகளை கொட்ட, இடம் ஒதுக்கக் கோரி, ஊராட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரியதாகும். இந்த ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சி மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே அமைந்துள்ளதால், குடியிருப்புகளும், லே அவுட்டுகளும் அதிக அளவில் உள்ளன. ஊராட்சியில் வீடு வீடாக தூய்மை பணியாளர்கள், குப்பைகளை சேகரித்து, அதை தரம் பிரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் பொது மக்கள் சிலர், கடை வியாபாரிகள் ஆகியோர் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையின் ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சிக்கு என, குப்பை கொட்ட தனியாக இடம் இல்லாததால், இந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சாலையின் ஓரப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. மேலும் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவர் விமலா கூறியதாவது: மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே உள்ள, ஐந்து வார்டுகளில் தினமும் நான்கு டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதில் தரம் பிரித்த மக்கும் குப்பைகளை மட்டும், மேட்டுப்பாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட அனுமதிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் கொட்ட அனுமதி இல்லாததால், குப்பைகள் சாலையின் ஓரத்தில் குவிந்து கிடக்கின்றன. எனவே ஊராட்சி உள்ள புறம்போக்கு காலியிடங்களில், ஏதாவது ஒரு இடத்தில் குப்பை கொட்ட அனுமதி வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தால், அங்கு குப்பைகளை கொட்டப்படும். இவ்வாறு ஊராட்சித் தலைவர் கூறினார்.