சிட்டி கிரைம்
* தொழிலாளியை தாக்கியவர் கைது
சீரநாயக்கன்பாளையம், விவேகானந்தர் தெருவை சேர்ந்த ரங்கநாதன், 52, தெலுங்குபாளையம், ஆறுமுக உடையார் வீதியை சேர்ந்த சந்திரசேகர், 42. இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வேலைக்கு செய்யும் இடத்தில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரங்கநாதன், சொக்கம்புதுார் பகுதியில் இருந்த போது, மதுபோதையில் வந்த சந்திரசேகர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கிரிக்கெட் பேட்டால் தாக்கியுள்ளார். பின்னர் கத்தியால் ரங்கநாதனின் காது பகுதியில் குத்தியுள்ளார். காயமடைந்த ரங்கநாதன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். * மொபைல் போன் கடையில் திருட்டு
காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல மொபைல்போன் கடைக்கு, போன் வாங்குவது போல் வந்த வாலிபருக்கு, விற்பனையாளர் மொபைல் போன்களை காட்டியுள்ளார். விற்பனையாளர் அசந்த நேரத்தில் அந்த வாலிபர் இரண்டு போன்களை எடுத்துச்சென்று விட்டார். கடை விற்பனை மேலாளர் மற்றும் ஊழியர்கள், வாலிபரை துரத்திப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வால்பாறையை சேர்ந்த வெங்கடேஷ், 24 என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர். * மது பாட்டில்கள் பறிமுதல்
மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், செல்வபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்வபுரம் பை பாஸ் சாலையில் உள்ள ஒரு இடத்தில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். * வழிப்பறி செய்தவர் கைது
சிங்காநல்லுார், வசந்தா மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 31; ஹெல்மெட் மற்றும் பொம்மை வியாபாரி. இவர் நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் நடந்து சென்ற போது, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிபிரபு என்பவர் வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். கத்தியை காட்டி மிரட்டி, சந்திரசேகரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றுள்ளார். புகாரின் அடிப்படையில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிபிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.