கோவை:''கோவை மாஸ்டர் பிளான் விரைவில் வெளியாகும்,'' என, நகர ஊரமைப்பு துறை இயக்குனர் கணேஷன் தெரிவித்தார்.கோவை பேர்புரோ கண்காட்சியில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது:கோவைக்கான வரைவு மாஸ்டர் பிளான், விரைவில் முழு வடிவத்துக்கு வரும். அடுத்ததாக, தமிழகத்தின் 135 நகரங்களில், அடுத்த இரண்டு வருடங்களில், மாஸ்டர் பிளான் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாஸ்டர் பிளான் மேம்பாடு குறித்து, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இருந்து எட்டு மாஸ்டர் பிளான் குறித்து அறிக்கை சமர்ப்பித்தோம். இதன் செயல்பாட்டுக்கு, தலா 50 கோடி வீதம், 400 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.சுய சான்று அனுமதி அடிப்படையில், 2,500 சதுரடியில், 3,500 சதுரடியில் வீடு கட்டலாம் என்ற திட்டம், வீடு கட்டும் பலருக்கு புதிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தெலுங்கானாவில் மட்டும் இந்த நடைமுறை உள்ளது. அங்கும், 625 சதுரடிக்கு மட்டுமே அனுமதி. தமிழகம் இதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், 500 அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அனுமதி வாங்கக் கூடிய சூழல் தான் தற்போது நிலவுகிறது.தாலுகா அளவில் இருந்த 'ஹாகா' கமிட்டி, 2003ல் இருந்து, கிராம அளவிலும் வந்தது. இதை தற்போது, சர்வே எண்ணாக மாற்றலாமா என பரிசீலித்து வருகிறோம். இப்படி செய்தால், பல பகுதிகளில் ஹாகா விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து, கோவை, கன்னியாகுமரியில் முதற்கட்டமாக பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.