பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்
கோவை:பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை கோட்டைமேடு பி.கே.செட்டி வீதியை சேர்ந்தவர் புஷ்பா, 60; திருமணமாகவில்லை. இவர் அக்கம் பக்கத்தினரிடம் பேசாமல், தனியாக வசித்து வந்தார். உறவினர்கள் மட்டும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், புஷ்பாவின் உறவினர் பிரிட்டோராஜ் அவரை பார்த்து சென்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம் புஷ்பா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் பிரிட்டோராஜூக்கும், உக்கடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். புஷ்பா அமர்ந்த நிலையில் சடலமாக, அழுகிய நிலையில் காணப்பட்டார்.போலீசார் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து பிரிட்டோராஜ் புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.