உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சங்கம் கலைப்பு! இனி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட உத்தரவு

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சங்கம் கலைப்பு! இனி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட உத்தரவு

கோவை;கோவையில் செயல்பட்டு வந்த குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சங்கம் கலைக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.குடும்பச் சூழல், வறுமை காரணமாக, பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, வேலைக்கு அனுப்பப்படுகின்றனர்.இதுபோன்ற குழந்தைகளை தொழிலாளர் நலத்துறை, காவல்துறை மற்றும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தினர் இணைந்து, கள ஆய்வு செய்து, அவர்களை மீட்கின்றனர்.அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி, பயிற்சி மையங்களில் சேர்த்து, கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்கின்றனர். இம்முறையில் ஏராளமான குழந்தைகள் மீட்கப்பட்டிருக்கின்றனர்.அவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு, உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. இச்சூழலில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சங்கம் சமீபத்தில் கலைக்கப்பட்டு, தொழிலாளர் நலத்துறையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டபோது, ''மத்திய அரசின் திட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது தொழிலாளர் நலத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை தனி அலுவலகமாக செயல்பட்டது. இனி, தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்படும்.இதனால், குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணி தடைபடாது; தொழிலாளர் நலத்துறையினர் மேற்கொள்வர். நிரந்தர பணியாளர்கள் பணியாற்றியிருந்தால், தொழிலாளர் நலத்துறையில் இணைக்கப்படுவர். ஒப்பந்த பணியாளர்களாக இருந்தால், பணியை தொடர முடியாது,'' என்றார்.

குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால் தண்டனை!

தொழிலாளர் நலத்துறை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எந்தவொரு நிறுவனத்திலும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 18 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது.மீறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குழந்தை தொழிலாளர் தொடர்பாக, 1098 என்ற எண்ணுக்கோ அல்லது, pencil.gov.inஎன்ற இணைய தள முகவரிக்கோ புகார் அனுப்பலாம்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி