டிரைவருக்கு பாட்டில் குத்து; ஆசாமிக்கு 16 மாதம் சிறை
கோவை; டிரைவரை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற ஆசாமிக்கு, 16 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை அருகேயுள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். மடத்துகுளத்தில், தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்த இவர், குடும்பத்தினரை பார்க்க ஊருக்கு வந்திருந்தார். 2014, ஜன., 19ல், சீரநாயக்கன் பாளையத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் வாங்க சென்ற போது, அதே பகுதியிலுள்ள முனியப்பன் வீதியை சேர்ந்த அனீஸ்குமார்,36, திடீரென சந்தோஷ்குமாரை வழிமறித்து, தகராறு செய்தார். அப்போது, மது பாட்டிலை உடைத்து, சந்தோஷ்குமார் மீது சரமாரியாக குத்தியதில் காயம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.புரம் போலீசார் அனீஸ்குமாரை கைது செய்து, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி தமயந்தி, அனீஸ்குமாருக்கு 16 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.