அனுபவங்களே கவிதைக்கு ஆன்மபலம்! இலக்கிய சந்திப்பில் புகழாரம்
பொள்ளாச்சி:கவிதையின் ஆயுட்காலம் அதிகம். அனுபவங்கள் கவிதைக்கு ஆன்மபலமாக இருக்கின்றன என, இலக்கிய வட்ட சந்திப்பு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின், 122வது இலக்கியச் சந்திப்பு லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.கவிஞர் சுஜாதா செல்வராஜ் எழுதிய, கடலைக் களவாடுபவள் எனும் கவிதைத் தொகுப்பினை கவிஞர் வேல்கண்ணன் அறிமுகப்படுத்தினார். கவிஞர் பிருந்தாசாரதி எழுதிய முக்கோண மனிதன் கவிதைத் தொகுப்பினை கவிஞர் சுடர்விழி அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் முத்துநிலவன் எழுதிய தமிழ்இனிது கட்டுரைத் தொகுப்பினை, என்.ஜி.எம் கல்லுாரி பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் அறிமுகப்படுத்தினார். கவிஞர் பெரியசாமி எழுதிய அகப்பிளவு கவிதை தொகுப்பினை கவிஞர் இளங்கோ அறிமுகப்படுத்தினார்.கவிஞர் பிருந்தாசாரதி பேசுகையில், ''ஓர் இலக்கிய இயக்கமாக பொள்ளாச்சி இலக்கிய வட்டம் உருவாகி இருக்கிறது. வாசகர்களுக்கு, மாணவர்களுக்கு நுால்களை அறிமுகப்படுத்துவது அவசியம். அதை இலக்கிய அமைப்புகள் செயல்படுத்த வேண்டும்.திருக்குறள் கவிதைதான் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் நிற்கிறது. கவிதையின் ஆயுட்காலம் அதிகம். சோகத்தையும் கவிதை காவியமாக்கிவிடுகிறது. அனுபவங்கள் கவிதைக்கு ஆன்மபலமாக இருக்கின்றன.தண்ணீர் பற்றி நாவல்கள் இருக்கின்றன. சிறுகதைகள், கட்டுரைகள் இருக்கின்றன. இவையெல்லாம் தரும் அடர்த்தியை ஒரு சிறு கவிதையில் கூட கவிஞனால் சொல்லிவிட முடிகிறது.குறைந்த சொல்லில் நடக்கும் அற்புதம் கவிதை. கலைஞரின் உரைகளை சிறுவயதில் கேட்டுத்தான் எழுத துவங்கினேன்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்வில், படித்ததில் பிடித்தது, கவியரங்கம் ஆகியவை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை இலக்கிய வட்ட கவிஞர்கள் செய்திருந்தனர்.