அனுமதியின்றி ட்ரோன் பறக்க விட்டவருக்கு அபராதம்
வடவள்ளி; மருதமலை வனப்பகுதியில், அனுமதின்றி ட்ரோன் பறக்க விட்டவருக்கு, வனத்துறையினர், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மருத மலை சுற்று, வனப்பகுதியில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதியில், மலைமேல் கோவில் அமைந்திருப்பதால், ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவிலுக்காக, வனத்துறைக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த வனப்பகுதியில், சிறுத்தை, யானை, காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில், அத்துமீறி நுழையவும், ட்ரோன் பறக்க விடவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த, 10ம் தேதி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த முகேஷ் என்பவர், மருதமலையில் நடந்த திருமணத்திற்காக, வீடியோ எடுத்து கொண்டிருந்தார். வனத்துறை அனுமதியின்றி, ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த வனக்காப்பாளர் சரவணகுமார், தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டதாக, முகேஷின் ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்து, மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து வனத்துறையினர், முகேஷ்க்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வனப்பகுதியில், அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.