விநாயகர் சதுர்த்தி விழாவில் பட்டாசு வெடிக்கத் தடை!
கோவை: வரும் செப்., 7ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து ஜமாஅத், பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். துாய களிமண்ணால் விநாயகர் சிலைகள் தயாரித்திருக்க வேண்டும். ரசாயண சாயங்களை பயன்படுத்தக் கூடாது.10 அடி உயரத்துக்கு மிகாமல் சிலை நிறுவ வேண்டும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.மினி லாரி, டிராக்டர்களில் சிலைகள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது.சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள் மற்றும் ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. சிலைகளை கரைப்பதற்கு முன், மலர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுக்க வேண்டும். பொது அமைதி, பாதுகாப்புக்கு எவ்வித இடையூறின்றி செயல்பட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.கூட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், அசோக்குமார், சரவணக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.