பங்குச்சந்தையில் அதிக லாபம் தருவதாக மோசடி ; இருவர் கைது
கோவை:பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என கூறி, ரூ.11.5 லட்சம் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். வடவள்ளி, தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, 34. கணுவாய், ராஜிவ் காந்தி வீதியில் ஜிம் நடத்தி வருகிறார். 2015ம் ஆண்டு, தொண்டாமுத்துார் ரோட்டை சேர்ந்த கவுதம், 26, அவரின் தம்பி ஹரிஸ், 20, தாய் தமிழ்செல்வி, 47, தங்கவேல், 65 அவரின் மனைவி கல்யாணி, 58 மற்றும் மகன் பிரவின், 30 ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, தண்டபாணி அவர்களுடன், நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு, செப்., மாதம் தண்டபாணியை போனில் அழைத்து பேசிய பிரவீன், தங்களிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளார். பின்னர், தங்கவேல் மற்றும் ஹரிஸ் ஆகியோரும் இதையே தெரிவித்துள்ளனர். இதை நம்பிய தண்டபாணி, தன்னிடம் இருந்த ரூ. 11 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, முதலீடு செய்த பணத்திற்காக லாபத்தையும், முதலீட்டையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை. போனில் அழைத்து கேட்டபோதும் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தண்டபாணி, வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஹரிஸ் மற்றும் கவுதம் ஆகியோரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.