உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு அருகே கழிவு குவிப்பு; சுகாதாரம் பாதித்து மக்கள் அவதி

குடியிருப்பு அருகே கழிவு குவிப்பு; சுகாதாரம் பாதித்து மக்கள் அவதி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மக்கள் மனு அளித்தனர்.பா.ஜ., பொள்ளாச்சி தெற்கு கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஊஞ்சவேலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 'டெவெலப்மென்ட்' பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள தனியார் நிலப்பகுதியில், குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பைக் கழிவுகள், காற்றில் பறந்து பரவுகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது.ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. குப்பையை அகற்றுவதுடன், அங்கு குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்ப்புலிகள் கட்சியினர் கொடுத்த மனுவில், 'ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்காபுரம் 'கோட்டர்ஸ்' காலனியில், பட்டியலின அருந்ததியர் வசிக்கின்றனர். இவர்கள், வாடகை வீடுகளிலும், தனியார் தோட்டத்து சாளைகளிலும் ஒரே வீட்டில், 3 மற்றும் 4 குடும்பத்தார் வசிக்கின்றனர். இதனால், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ