உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பணிகள் பாதிப்பு வெறிச்சோடின அரசு அலுவலகங்கள்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் பணிகள் பாதிப்பு வெறிச்சோடின அரசு அலுவலகங்கள்

பொள்ளாச்சி; ஜாக்டோ -- ஜியோ அமைப்பின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.தமிழகத்தில், கடந்த, 2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு பின், அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.அரசின், பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது.அதன்படி, நேற்று தற்செயல்விடுப்பு போராட்டத்தில், ஜாக்டோ -- ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் உள்ள, 1,731 பேரில், 789 பேர் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள, 1,431 ஆசிரியர்களில், 496 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபோன்று, சப் - கலெக்டர் அலுவலகத்தில் 19 பேரில், 10 பேரும், தாலுகா அலுவலகத்தில், 137 பேரில், 18 பேரும்; வணிக வரித்துறையில், 68 பேரில், 27 பேரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது போன்று, நெடுஞ்சாலைத்துறை, சத்துணவு ஊழியர்கள் என பல்வேறு துறையை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.வருவாய்துறை அலுவலகங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பணிக்காக வந்த மக்கள் திரும்பி சென்றனர். பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள், போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.

உடுமலை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கமான, ஜாக்டோ-ஜியோ சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்தது.இதனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம், ரேஷன் கடை, அங்கன்வாடி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ