கோவை;தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக, அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என, கார்டுதாரர்களிடம் கருத்து கேட்டறிய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் ஒரு லிட்டர் போன்றவை வழங்கப்படுகின்றன. இதில், கோதுமை மட்டும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும். அரிசி இலவசம். சந்தையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பரவலாக மேற்கொள்வதால், விவசாயிகளின் நலன் கருதி, தேங்காய் எண்ணெய் வழங்கலாம் என, மாவட்ட நிர்வாகத்தில் இருந்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிந்ததையடுத்து, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என்பது தொடர்பாக, கார்டுதாரர்களிடமே கருத்து கேட்டு, அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, ரேஷன் கடைகளுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டுள்ளது.குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், ரேஷன் கடையில் பாமாயில் ஒரு லிட்டருக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் பெற விருப்பமா ஆம்/ இல்லை என கருத்து கேட்டு, படிவத்தை பூர்த்தி செய்து குடும்ப அட்டைதாரர் கையொப்பம் பெற வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை, மாவட்ட நிர்வாகம் சேகரித்து, தமிழக அரசின் கவனத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.