உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்னைக்கு இதோ தீர்வு!

சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்னைக்கு இதோ தீர்வு!

மனிதர்களிடையே தற்போது உள்ள உணவு பழக்க வழக்க மாற்றத்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.இதில், 90 சதவீத முதியவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எலும்பு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதற்காக மருந்து மாத்திரை சாப்பிடாத முதியவர்களை, வீடுகளில் பார்ப்பதே அரிதாகி விட்டது.ஆனாலும் சில ஆரோக்கியமான, சீரான உணவு பழக்கத்தால், நோய்களில் இருந்து முதியோர் விடுபடலாம்; மருந்து மாத்திரை இல்லாத வாழ்க்கை வாழலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாமணி.அவர் கூறியதாவது:சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எலும்பு பிரச்னைகளில் இருந்து விடுபட, முதியவர்களுக்கு சீரான உணவு முறை முக்கியம். உடல்நலத்தை பராமரிக்கவும், நோயில்லா ஆயுளை நோக்கி பயணிக்கவும் உணவு உதவுகிறது.வயதாக, ஆக, ஊட்டச்சத்துத் தேவைகள் மாறுகின்றன. உடலின் செயல்பாடுகளுக்கு உதவும் சிறப்பான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

தேவையான உணவு

பழங்கள் மற்றும் காய்கறியை, தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இவை முக்கியமான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் நார்சத்துக்களை வழங்குகின்றன.ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி, இவை நார்ச்சத்து நிறைந்தவை, சீரான செரிமானத்திற்கும், மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன.மீன், கோழி, பயறு வகைகள், துவரம் பருப்பு, போன்ற உணவுப்பொருட்களை உட்கொள்ளலாம். மீன்கள், இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஒமேகா-, 3 கொழுப்பு அமிலங்களை வழங்குகின்றன.கால்சியம் மற்றும் 'வைட்டமின் டி', எலும்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இதற்கு கொழுப்பில்லாத பால், தயிர், பன்னீர் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு, முக்கியமான கால்சியம் மற்றும் 'வைட்டமின் டி'யை வழங்குகின்றன. பால் குடிக்க முடியாதவர்கள், பாதாம்பால் அல்லது சோயா பால் உட்கொள்ளலாம்.பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைப்பழம், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு மற்றும் பசலைக்கீரை போன்ற உணவுப்பொருட்கள், பொட்டாசியம் அதிகம் கொண்டவை. உடல் உழைப்பு குறைந்து விடுவதால், வயதானவர்களுக்கு எளிதில் தாகம் ஏற்படாது. ஆனாலும் ஒவ்வொரு நாளும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கஞ்சி, பழங்கள், காய்கறி போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் உட்கொள்ளுங்கள். இந்த உணவுப்பழக்கத்துடன், வாக்கிங் அல்லது இலகுவான உடற்பயிற்சியும் அவசியம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி