அகிம்சை வழி நடந்தால் நீண்ட காலம் வாழலாம்
கோவை; மகாத்மா காந்தியின் வாழ்க்கை, அவரது கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்காக போத்தனுாரில், கோவை மகாத்மா காந்தி நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. காந்தி கோவை வருகை தந்து, 91 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சமூக சேவை செய்தவர்களுக்கு நினைவகம் சார்பில் 'மனிதநேயம் விருது' வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், 10 பேருக்கு மனிதநேய விருது வழங்கப்பட்டது.விழாவில் கலெக்டர் பவன்குமார் பங்கேற்று விருதுகளை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசுகையில், ''மகாத்மா காந்தி, 90 ஆண்டுகளுக்கு முன்பு போத்தனுாருக்கு வந்து தங்கியிருந்த இந்த இடம், அவரது நினைவிடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தை ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் சிறப்பாக பராமரித்து வருகின்றனர்.காந்திய கொள்கையை கடை பிடிப்பவர்கள், அகிம்சை வழி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். காந்திய கொள்கைகளை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும், '' என்றார்.மகாத்மா காந்தி நினைவக அறங்காவலர் ஜி.டி.ராஜ்குமார், ஜி.டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், காந்தி கிராமிய பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்கண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.