அனைவருக்கும் காப்பீடு விழிப்புணர்வு நடைபயணம்
கோவை:கோவை கோட்ட எல்.ஐ.சி., சார்பில், காப்பீடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை, இன்சூரன்ஸ் வாரம் கடைபிடிக்கப்பட்டது. எல்.ஐ.சி., ஊழியர்கள், முகவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 5ம் தேதி, ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்களுக்காக மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் 2047க்குள் அனைத்து மக்களுக்கும் காப்பீடு என்று, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை கோட்ட அலுவலகம் சார்பில், திருச்சி ரோடு கோட்ட அலுவலகத்தில் இருந்து, இன்சூரன்ஸ் விழிப்புணர்வு குறித்த நடைபயணம், நேற்று காலை 6:30 மணியளவில் துவங்கியது. எல்.ஐ.சி., முதுநிலை கோட்ட மேலாளர் ராஜேந்திர குமார், துவக்கி வைத்தார். கோட்ட அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், பொதுமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.