மேலும் செய்திகள்
திருப்பூரை குளிர்வித்த திடீர் மழை
12-Mar-2025
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்குதியில், நேற்று மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த இரு மாதங்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் கொளுத்தும் வெயிலால், இரவில் உஷ்ணமாக மாறி, புழுக்கத்தை ஏற்படுத்தியது. கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதே நேரத்தில் அவ்வப்போது, மழையும் பெய்தது. நேற்று மதியம் 2:00 மணிக்கு, துாறலுடன் துவங்கி மழையின் தாக்கம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்தது. திடீர் மழையால், இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள், மழையில் நனைந்த படியே சென்றனர்.சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், நேற்று திடீரென பெய்த மழையால், குளிரான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வால்பாறை
வால்பாறையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்ததால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.இதனிடையே, கடந்த சில நாட்களாக வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. நேற்று முன்தினம் சாரல்மழை பெய்த நிலையில், நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது.இதனால், மின் வினியோகம் பாதித்தது. தொடர் மழையினால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் அவதிப்பட்டனர். நேற்று மாலை, 6:00 மணி வரை, வால்பாறை - 21, கீழ்நீராறு - 21, சின்னக்கல்லாறு - 36, சோலையாறு - 42 மி.மீ., மழையளவு பதிவானது. உடுமலை
உடுமலை பகுதிகளில், ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, அமராவதி அணைப்பகுதியில், 8 மி.மீ., திருமூர்த்தி அணை - 3, உடுமலை - 3, மடத்துக்குளம் தாலுகா --- 4 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.நேற்றும், மதியத்துக்கு மேல், பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர் சீதோஷ்ண நிலை துவங்கியது. திடீர் மழை காரணமாக, தாராபுரம் ரோடு, பழநி ரோடு, திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.தாராபுரம் ரோட்டில், மழை நீர் வெளியேற வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் வடியும் வகையில் உரிய கட்டமைப்புகள் ஏற்படுத்தாததோடு, ஆக்கிரமிப்புகள் காரணமாக ரோட்டிலேயே தேங்கி, பாதிப்பை ஏற்படுத்தியதுது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். - நிருபர் குழு -
12-Mar-2025