மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில்பக்தர்கள் சிறப்பு வழிபாடு
15-Feb-2025
கோவை; கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்வடம் பிடிக்கும் வைபவத்தில் ஆதினங்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என்று பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன், அதிகாலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருத்தேருக்கு எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தேரில் வீற்றிருந்த அம்மனை உப்பு, பழம் சமர்ப்பித்து தரிசித்தனர்.மதியம் பகல் 2:05 மணிக்கு தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதினம் குமரகுருபர அடிகளார், மேயர் ரங்கநாயகி, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை வடக்கு எம்.எல்.ஏ.,அம்மன் அர்ஜூனன், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், நாகசக்தி அம்மன் தியானபீடம் பாபுஜி சுவாமிகள், தர்மராஜாபீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரசுவாமிகள் உள்ளிட்டோர், தேர்வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் கோஷம் முழங்க, தேர் ராஜவீதி தேர்நிலைத்திடலில் இருந்து மெல்ல நகர்ந்தது. மேளதாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கின. தீயணைப்பு மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே செல்ல, அதற்கு பின் ஆதினங்கள், முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் செல்ல, தேர் மெல்ல அசைந்து வந்தது, கொள்ளை அழகாக இருந்தது.தேர் ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி தேர்நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் சுவாமியை வழிபட்டனர்.மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் துணை கமிஷனர்கள் தேவநாதன், உதயகுமார், உதவி கமிஷனர்கள் கணேஷ், மணிவர்மன், வேல்முருகன், நந்தினி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 20க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, ஆண்டுதோறும் பெரிய கடை வீதி (பி1 )போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தான் கோனியம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படும். கடந்த ஆண்டும் பெரியகடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கோனியம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பித்தார்.இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் சார்பில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அறநிலையத்துறை பெண் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதிக்கு பரிவட்டம் அணிவித்து, மரியாதை செய்தனர்.இதையடுத்து, ஸ்டேஷனிலிருந்து மேளதாளங்களோடு, புதியதாக பொறுப்பேற்ற உக்கடம் போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் புறப்பட்ட போலீசார், கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து, ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர்.
15-Feb-2025