உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை அருகே லாரி, லாரியாக மண் கடத்தல்; விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

காரமடை அருகே லாரி, லாரியாக மண் கடத்தல்; விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

மேட்டுப்பாளையம், : காரமடை அருகே மருதுாரில் லாரி, லாரியாக மண் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.கோவை மாவட்டம், காரமடை வட்டாரத்தில் உள்ள வெள்ளியங்காட்டில் காளியூர் குளம், அருக்காணி குட்டை, பெள்ளாதியில் உள்ள முங்கம்பாளையம் குட்டை உள்ளிட்ட பல்வேறு குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க தமிழக அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் ஆன்லைன் வாயிலாக பர்மிட் பெற்று, லாரியில் வண்டல் மண் எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், காரமடையை அடுத்த மருதூர் மாகாளியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழித்தடத்தில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் வண்டல் மண் என்ற போர்வையில், சிலர் இரவு, பகலாக அத்துமீறி, கிராவல் மண் எடுத்து லாரி லாரியாக கடத்துவதும், மதுக்கரை, பொள்ளாச்சி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், சில இடங்களில் பர்மிட் இல்லாமல் மண் அள்ளுவதாகவும் கூறப்பட்டது.இது குறித்த புகார் எழுந்ததை அடுத்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதே போல் பிற இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மண் கடத்துவது உறுதியானது.இதுபற்றி, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், 'அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மண் எடுப்பதால், எதிர்காலத்தில் நீர் தேங்குவது தடைபட்டு, நிலத்தடி நீர் மட்டம் கடும் பாதிப்படையும். மண் எடுக்க பர்மிட் வாங்கிய சிலர், அதனை தவறாக பயன்படுத்தி அரசு அனுமதித்த ஆழத்தை விட அதிக அளவில் மண் எடுத்து விற்பனை செய்கின்றனர். இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் மண் எடுக்கின்றனர். டிப்பர் லாரிகள் ஊருக்குள் அதிவேகத்தில் செல்கின்றன. அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை. மண் எடுப்பதையே நிறுத்த வேண்டும்,' என்றனர்.மருதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வருவாய் துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தான் மண் அள்ளப்படுகிறது,' என்றனர்.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், 'சட்டவிரோதமாக மண் எடுத்து கடத்தலில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காரமடை வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை