உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் டிரேடிங்கில் ஆசை: ரூ.1.6 கோடி இழந்த ஐ.டி., ஊழியர்

ஆன்லைன் டிரேடிங்கில் ஆசை: ரூ.1.6 கோடி இழந்த ஐ.டி., ஊழியர்

கோவை: கோவை, தொண்டாமுத்துார், லட்சுமி நகரை சேர்ந்தவர் விவேக், 43, ஐ.டி., ஊழியர். 'ஷேர் மார்க்கெட்' செய்வதில் ஆர்வம் இருந்ததால், இது குறித்து இணையத்தில் தேடியுள்ளார்.இந்நிலையில், கடந்த மே, 24ம் தேதி அக்சதா ராம் என்பவரிடம் இருந்து விவேக் எண்ணில் 'வாட்ஸ் ஆப்' அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தங்கள் குழுவில் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.பின்னர், மீண்டும் தொடர்பு கொண்டு, 'உப் சால்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார். 'உ.பி.எஸ்., பயனீர் வெல்த் பிளான்' என்ற திட்டத்தில் இணைத்துள்ளதாகவும், உ.பி.எஸ்., குரூப் டிரேடிங் வாயிலாக முதலீடு செய்யுமாறும் தெரிவித்தார்.இதைதொடர்ந்து, விவேக் மே, 29ம் தேதி ரூ. பத்தாயிரம் முதலீடு செய்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ் ஆப் குழு வாயிலாக பங்குகளை வாங்குவது, விற்பது தொடர்பான தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.இவற்றை நம்பிய விவேக், மீண்டும், மே, 30ம் தேதி ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். இதனிடையில், மோசடி நபர்கள் கொடுத்த ஆப் வாயிலாக விவேக், ரூ. 1000 லாபத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். பணத்தை எடுக்க முடிந்ததால், நம்பிக்கை பெற்ற விவேக், மே, 24ம் தேதி முதல் ஜூலை, 27ம் தேதி வரை, 29 தவணைகளாக, ரூ. 1 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரத்தை மோசடி நபர்கள் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.மோசடி நபர்கள் போலியாக உருவாக்கிய செயலியில், அவர் டிரேடிங் செய்து லாபம் வருவது போலவே காட்டியுள்ளது. இறுதியாக, அவரின் 'உப் சால்' ஆப் கணக்கில் 15 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 12 ரூபாய் இருப்பதாக காட்டியுள்ளது. இந்நிலையில், விவேக் பணத்தை எடுக்க முயற்சித்தார்.அப்போது, மொத்த தொகையில் இருந்து 20 சதவீதம் அதாவது, சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் 'கமிஷன்' பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவேக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ