மாரியம்மன் வெள்ளித்தேரோட்டம் துவக்கம் : நாளை கோவிலில் நிலை நிறுத்தம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், வெள்ளித்தேரோட்டம் நேற்று துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது.கடந்த, 18ம் தேதி கம்பம் நடுதல், கடந்த 28ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, நேற்று, 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும், 12அடி உயர மரத்தேரில், விநாயக பெருமானும் எழுந்தருளினர். பூசணிக்காய் சீர் முடிந்த பின்னர் இரவு, 8:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், புஷ்ப அலங்காரத்தில், குங்கும நிற புடவை உடுத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திரளான பக்தர்கள், தேர்வடம் பிடித்து நகர்ந்த போது வாழைப்பழங்களை சூறை விட்டும், பக்தி பரவசத்தில், 'அம்மா, தாயே... காத்தருள வேண்டும்,' எனக்கூறி வழிபட்டனர்.பக்தர்களின் வெள்ளத்தில், விநாயகப்பெருமான் முன் செல்ல, அவரை தொடர்ந்து அம்மன் தேரில் பவனி சென்றார். வெங்கட்ரமணன் வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று, 6ம் தேதி அங்கிருந்து துவங்கும் தேரோட்டம், சத்திரம் வீதியிலும் நிலை நிறுத்தப்படுகிறது. நாளை 7ம் தேதி அங்கிருந்து துவங்கி, கோவிலில் தேர் நிலை நிறுத்தப்படுகிறது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி இரவு, மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.