| ADDED : மே 01, 2024 12:21 AM
மேட்டுப்பாளையம்;பவானி சாகர் அணையில், யாரும் குளிக்கச் செல்லாத வகையில், வழியில் பாறாங்கற்களை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை சீசன் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், சிறுவர்கள் தண்ணீரில் குளிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாததால், வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் நீர்நிலைகளை தேடிச் செல்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால், பவானிசாகர் அணையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்கு, சிறுவர்கள், இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் அணைக்கு செல்லும் வழிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் பல இடங்களில், சேரும் சகதியும் நிறைந்து உள்ளன. மேலும் ஆழமான பகுதிகளும், அதிகளவில் உள்ளன. இதனால் நீச்சல் தெரியாதவர்கள், தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளது. வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கவும் பவானி சாகர் அணைக்கு வந்து செல்கின்றன. அணை நீரினாலும், வனவிலங்குகளினாலும் ஆபத்து ஏற்படுவதை தடுக்க, பொதுப்பணித்துறை நிர்வாகமும், அந்தந்த கிராம மக்களும் இணைந்து, அணைகளுக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் அமைத்துள்ளனர். சித்தன்குட்டை பகுதி வரை அணையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அங்கு குளிக்க செல்ல இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை தடுக்கும் வகையிலும், எந்த வாகனங்களும் செல்லாமல் இருக்கவும், மண் பாதையின் குறுக்கே, பெரிய பெரிய பாறாங்கற்களை உருட்டி வைத்துள்ளனர். இதனால் பவானிசாகர் அணைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்துள்ளது.