ஆள் பற்றாக்குறைக்கு இயந்திரமயமாக்கலே தீர்வு
கோவை;விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு இயந்திர மயமாக்கல்தான் தீர்வு. குறு, சிறு விவசாயிகளும் பயனடையும் வகையில், அரசு சார்பில் இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த மாவட்ட அளவிலான முகாம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.முகாமை எம்.பி., ராஜ்குமார் துவக்கி வைத்தார். முகாம் குறித்து கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதுதான் தீர்வு. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும். அதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.வேளாண் பொறியியல் உட்பட பல்வேறு துறைகளின் கீழ் விவசாயிகளுக்கு இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. வாங்க இயலாத விவசாயிகளுக்கு, குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன.இ- வாடகை செயலி வாயிலாக மணிக்கணக்கில் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கலாம். இந்த செயலியைப் பயன்படுத்துவது, அரசின் பல்வேறு திட்டங்கள், இயந்திரங்களைப் பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. இதுகுறித்து பயிற்சி அளிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இம்முகாம் நடத்தப்படுகிறது.தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகள் மத்தியில் இயந்திர பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.முகாமில், சக்கர வகை அறுவடை இயந்திரம், மினி டிராக்டர், டிராக்டர், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம், வாகனத்துடன் கூடிய தேங்காய் பறிக்கும், மருந்து தெளிக்கும் இயந்திரம், ரொட்டாவெட்டர், பவர் டிரில்லர் உள்ளிட்ட பல்வேறு வகை இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சவுந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜிவ் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.